வியாழன், அக்டோபர் 07, 2010

மண்ணும், மரமும், மனிதனும். - அத்தியாயம் 2

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
'கிழக்குச் சீமையிலே' என்ற அந்த அற்புதமான திரைக் காவியத்தில், மற்றுமொரு பாடல் காட்சியில், படத்தின் பிரதான கதாநாயகி 'ராதிகா' திருமணமாகிப் புகுந்தவீடு செல்லும் காட்சியில் அவள்(கதாநாயகி) அனைவருக்கும் 'சென்றுவருகிறேன்' என்று பதில் சொல்லிப் போவதாக அமைந்த பாடலாகிய "வண்டிமாடு எட்டுவச்சு முன்னே போகுதம்மா' என்ற பாடலில் வரும் வரிகள் கேட்போரை மட்டுமல்ல, தங்கைகளோடு கூடப்பிறந்த அண்ணன்கள் அனைவரையுமே கண்கலங்க வைத்தன. இதோ கதாநாயகி அனைவரிடமும் விடைபெறும் பாடல் காட்சி உங்களுக்காக:

பாடலைப் பார்த்தும், கேட்டும் நெகிழ இங்கே அழுத்தவும்.

அந்தப் பாடலில், நமது மண்ணும் மரமும், மனிதனும் என்ற தலைப்போடு தொடர்புபட்ட பின்வரும் வரிகளைப் பார்ப்போம்.
அவள் கூறுகிறாள்:
"அண்ணே போய்வரவா, அழகு போய்வரவா,
மண்ணே போய்வரவா, மாமரமே போய்வரவா,
அணில்வால் மீசவச்ச அண்ணே உன்னைவிட்டு,
புலிவால் மீசவச்ச புருசனோட போய்வரவா"
என்ற வரிகள் கேட்போர் உள்ளங்களை எல்லாம் கொடிய வாள்கொண்டு அறுத்தன. இதில் அவள் கேட்போரை நெகிழவைக்கும் விதமாக அப்படி என்னதான் கூறுகிறாள்?
சிறுவயது முதலே தாய்,தந்தையில்லாமல் வளர்ந்த அவளைக் 'கண்ணை இமைகாப்பதுபோலக் காத்த' அண்ணனுக்கு விடை கூறுகிறாள், "அண்ணே போய்வரவா"
அதற்கடுத்ததாக அவளது வரிசைக்கிரமத்தில் இடம்பிடித்திருப்பது அவளது நெடுநாள் சிநேகிதியாகிய 'அழகு' என்பவள். அறிவு தெரிந்த காலத்திலிருந்தே அவளோடு ஒட்டி உறவாடிய, 'கெந்தியடித்தல்' முதல் 'பல்லாங்குளியாடுதல்'  வரை அவளுடனேயே வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்த 'அழகு' என்ற சிநேகிதியைப் பார்த்துக் கூறுகிறாள் "அழகு போய்வரவா" என்று. அதற்கடுத்தாற்போல் தான் பிறந்தது முதல் இன்றுவரை 'ஆடி,ஓடி, விளையாடிப் புரண்ட, தனக்குச் சோறளித்த, வாழ்வளித்த தன் மண்ணுக்குக் கூறுகிறாள் "என் மண்ணே போய்வரவா" என்று. உடன்பிறந்தவனையும், உயிர் நண்பியையும், தன் மண்ணையும் மட்டும் அவள் நேசித்தவளா? இல்லவே இல்லை, மனிதர்கள் எல்லாம் அடுத்த மனிதர்களை 'உணர்ச்சியிலாதவர்' என்று இழித்துரைப்பதற்கு பயன்படுத்தும் சொல் 'மரம்' என்பதுதான். அந்த மரத்திலே, மனித வாழ்க்கையின் பல அத்தியாயங்களோடு தொடர்புடைய மாமரத்தின் மீதுகூட அவள் உணர்ச்சிபூர்வமான உள்ளன்பு வைத்திருந்தாள் அதனால்தான் அவள் தன் முற்றத்து மாமரத்தையும் மறக்காமல் கூறுகிறாள் 'மாமரமே போய்வரவா'
(அடுத்த வாரமும் தொடரும்)

உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக