வியாழன், டிசம்பர் 02, 2010

கிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா, கொடியவனா? அத்தியாயம் 7

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
இப்போது மீனவர்களின் முன்னால் நான்கு சிக்கல்கள் எழுந்திருந்தன, 1. இத்தகைய பரிதாபகரமான நிலையில் இச்சிறுவனைக் கைவிட்டுச் செல்ல அவர்களது 'மனிதாபிமானம்' இடம்தரவில்லை. 2. இச்சிறுவனை அவனது 'ஜெனோவாக் கடற்கரைக்கு' கொண்டுசென்று, மீனவர்களிடமோ, அல்லது பெரியவர்களிடமோ ஒப்படைப்பதற்கு 'கால அவகாசம்' எடுத்துக் கொண்டால் இவர்கள் பிடித்து வைத்திருக்கும் 'மீன்கள்' பழுதடைந்துவிடும். 3. சிறுவனை சொந்த ஊரில் ஒப்படைப்பதில் நேரம் செலவு செய்யப்பட்டால் இம்மீனவர்கள் பிடித்துவைத்திருக்கும் மீன்களை அவர்களது நாட்டில் 'சந்தைப் படுத்துகின்ற' வாய்ப்பு இழக்கப்படும். 4. சிறுவனை தமது நாட்டுக்கு அழைத்துச் சென்றால், அடுத்த நாள் அவனை அவனது நாட்டுக்கு அழைத்துச் சென்று ஒப்படைப்பது 'சம்பிரதாயங்கள்' நிறைந்த மிகவும், சிரமமான காரியமாகும்.


cold_boy.gifஇவ்வாறு சிந்தித்துக் கொண்டே அம்மீனவர்களின் தலைவனானவன், சிறுவனைத் தமது படகில் ஏற்றுமாறு தனது பணியாளர்களுக்குப் பணித்தான். குளிரால் நடுங்கி விறைத்துப் போயிருந்த சிறுவன் கொலம்பஸின் உடைகளைக் களைந்து, அவனுக்கு படகிலிருந்த தனது சக மீனவர்களின் சில உடைகளை அணிவிக்குமாறு கூறினான். மழையில் நனைந்து போயிருந்த சிறுவனைத் துணியொன்றினால் ஈரம்போகத் துடைத்து விடுமாறும், உடம்பில் சூடு ஏற்படுத்துவதற்காக, உள்ளங்கை, மற்றும் பாதங்கள் போன்றவற்றைத் தேய்த்து விடுமாறு கட்டளையிட்டான் அந்தக் கருணையுள்ளம் கொண்ட மீனவர் தலைவன். சிறுவன் கொலம்பஸ் பசியால் வாடியிருக்கிறான் என்பது, அவனைப் பார்க்கும்போதே தெரிந்தது, இருப்பினும் அவனுக்கு வழங்குவதற்கு அம்மீனவர்களிடம் எவ்விதமான உணவுப் பதார்த்தங்களும் கைவசம் இருக்கவில்லை, இருப்பினும் அவர்கள் மரக்குடுவையில் தம்மோடு எடுத்துவந்திருந்த சுடுநீரை சிறுவன் கொலம்பசிற்குக் குடிக்கக் கொடுத்தனர். 


இத்தகைய பேருதவிகளைச் செய்த அம்மீனவர்களைக் கொலம்பஸ் சந்தேகத்துடனும், பயத்துடனுமே நோக்கினான். காரணம் அவர்களது கரடு முரடான தோற்றம், மற்றும் அவன் தனது ஊரவர்கள், உறவினர் தவிர்ந்த அந்நியர்களை ஒருபோதுமே சந்தித்ததில்லை, அது மாத்திரமின்றி அவன் ஒருபோதும் குளிரால் விறைத்து அதற்காக முதலுதவி பெற்றதில்லை.மீனவர்கள் குளிரைப் போக்குவதற்காக இவனுக்கு சிகிச்சை செய்தபோது, அவனோ இவர்கள் தன்னைக் கொல்ல முற்படுகிறார்கள் என்றே நினைத்தான். இப்போது தனது பெற்றோர்களை நினைத்து அழத் தொடங்கினான். அழுகின்ற சிறுவனைத் தேற்றுகின்ற அளவுக்கு 'இத்தாலிய மொழி' தெரிந்த மீனவர்கள் யாரும் அப்படகில் இருக்கவில்லை. பிரெஞ்சு மொழியில் ஏதேதோ கூறி அவனைச் சமாதானப் படுத்த முனைந்தனர். ஆனாலும் அவன் அழுது கொண்டேயிருந்தான்.
இவ்வாறு அவன் அவர்களது தேற்றுதலையும் பொருட்படுத்தாது அழுதுகொண்டிருக்கும் வேளையில்தான் அந்தத் திடுக்கிடும் சம்பவம் நிகழ்ந்தது.
(தொடரும்)


உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக