ஞாயிறு, டிசம்பர் 12, 2010

முதற்பரிசு மூன்றுகோடி - அத்தியாயம் 9

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
சிங்கப்பூர் வழிகாட்டுகிறது 


சிங்கப்பூர், மலேசியா ஆகிய இரண்டு நாடுகளுக்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட 'தண்ணீர் ஒப்பந்தம்' எதிர்வரும் 2061 ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது(காலாவதியாகிறது) "அதன்பின் உங்களுக்குத் தண்ணீர் தரமாட்டோம், அதற்கு 
முன்னதாக நீங்கள் 'தன்னிறைவு' அடையக்கூடிய மாற்று வழிகளைக் கண்டுபிடியுங்கள்" என்று மலேசியா அரசு சிங்கை அரசிடம் கூறியது. சிங்கை அரசு பலவித சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தபின், மூன்று வகையான மாற்றுத் திட்டங்களைக் கண்டு பிடித்தது. அவையாவன:


1. மக்கள் உபயோகித்த தண்ணீரை(உதாரணமாக குளியலறை, சமயலறையில்) ஓரிடத்தில் ஒன்று சேர்த்து, அத்தண்ணீரைச் சுத்திகரித்து அதனைத் திரும்பவும் மக்களின் பாவனைக்காகச் சுற்றோட்டத்தில் விடுதல். இத்திட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் சிங்கப்பூரின் தண்ணீர்த் தேவையில் 50% தை ஈடுசெய்ய முடியும் என்று சிங்கை அரசு கருதுகிறது.

2.கடல்நீரைக் குடிநீராக்கி உபயோகித்தல். இதன்மூலம் சிங்கப்பூரின் தண்ணீர்த் தேவையில் 30 சதவீதத்தை ஈடுசெய்ய முடியும் என்று சிங்கப்பூர் அரசு கருதுகிறது.

3.மாடிக்கட்டிடங்களிலும், ஏனைய பகுதிகளிலும் மழைநீரைச் சேகரித்து அதனைப் பின்னர் பயன்படுத்துதல். இதன்மூலம் சிங்கப்பூரின் தண்ணீர்த் தேவையில் 20% தை ஈடுசெய்ய முடியும் என்று அரசு கருதுகிறது.

இத்திட்டங்களில் முதன்மையானதும், முக்கியத்துவம் வாய்ந்ததுமாகிய குளியலறை, மலசலகூடம், சமையலறை போன்றவற்றிலிருந்து பொது இடத்தில் சேமிக்கப்பட்ட தண்ணீரைத் திரும்பவும் உபயோகிக்கும்   திட்டம் கடும் விமர்சனத்துக்குள்ளானது. காரணம் இத்தண்ணீரில் மனிதர்களின் கழிவுகளாகிய மலம், சிறுநீர் போன்றவை கலந்திருக்கும் என்று மக்கள் அருவருப்புக்கு உள்ளானதும், இந்நீரில் நோய்க்கிருமிகள் கலந்திருக்கும் என்று மக்கள் சந்தேகம் கொண்டதுமே காரணமாகும். ஆனால் சிங்கப்பூர் அரசானது இத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு முன்னதாக பலவிதமான ஆய்வுகளைப் பல நாட்டு நிபுணர்கள், விஞ்ஞானிகளின் துணையுடன் மேற்கொண்டது. இத்தகைய ஆய்வுகளில் கலந்துகொண்ட விஞ்ஞானிகளும், நிபுணர்களும் பல வருடங்களாக நடத்திய ஆய்வுகளின் முடிவில் தமது கருத்தை வெளியிட்டனர். அவர்களது கூற்றுப்படி "மேற்படி தண்ணீரானது கழிவு நீரைச் சுத்திகரித்துப் பெறப்பட்டாலும், இத் தண்ணீரில் எந்தவிதமான நோய்க்கிருமிகளும் இல்லை. இத்தண்ணீர் நூறு வீதம் குடிப்பதற்கும், ஏனைய தேவைகளுக்கும் பயன்படுத்த உகந்தது"  என்று தமது அறிக்கையை வெளியிட்டனர். இந்த அறிக்கையை கவனமாக ஆய்வு செய்த உலக சுகாதார ஸ்தாபனமும்(W.H.O.) மேற்படி அறிக்கைகளை ஆய்வு செய்தபின் 2002 ஆம் ஆண்டில் மேற்படி தண்ணீர் குடிப்பதற்கு உகந்தது என்று சான்றிதழ் வழங்கியது.
இருப்பினும் சிங்கப்பூர் மக்கள் மேற்படி தண்ணீரை அருந்துவதற்குத் தொடர்ந்து தயக்கம் காட்டி வந்தனர். இதனால் சிங்கப்பூர் அரசு மேற்படி கழிவு நீரிலிருந்து சுத்திகரித்துப் பெறப்பட்ட தண்ணீர் சுத்தமானதும், அருந்துவதற்கு ஏற்றதும் என்று மக்களுக்கு நிரூபிப்பதற்குப்  பல பிரச்சாரங்களை மேற்கொண்டது. பிரதமர் தொடக்கம் அமைச்சர்கள் வரை பல முக்கிய பிரமுகர்கள் பொது இடங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் மேற்படி தண்ணீரை அருந்தி விழிப்புணர்வை ஊட்டினர். அதேபோல் சிங்கப்பூர் அரசு போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீரிலும், இவ்வாறு சுத்திகரிக்கபட்ட தண்ணீரே பயன்படுத்தப் படுகிறது என்ற விளக்கத்தை மக்களுக்கு வழங்கியது.
(போத்தலில் அடைக்கப் பட்ட தண்ணீர் சிங்கப்பூரில் Newater என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது) இப்போது சிங்கப்பூர் மக்கள் நாட்டின் தண்ணீர்த் தட்டுப்பாட்டையும், விலையேற்றத்தையும் கருத்தில் கொண்டு, நாட்டிற்கு உதவும் எண்ணத்தோடு, அரசின் உறுதி மொழிகளுக்கு மதிப்பளித்து 'கழிவு நீரிலிருந்து' தயாரிக்கப்பட்ட குடி தண்ணீரைக் குடிக்க ஆரம்பித்துள்ளனர். இவர்களின் நாட்டுப்பற்று போற்றுதற்குரியது.
இவ்வாறு கழிவு நீரைக் குடிநீராக்கும் திட்டம் சிங்கப்பூரில் மட்டும் நடைமுறைப் படுத்தப் படவில்லை, போதுமான தண்ணீர் வசதியுள்ள அமெரிக்காவின் ஒரு சில பெரிய நகரங்களிலும் நடைமுறையிலுள்ளது என்பதுடன் மிகச்சிறிய நாடாகிய சிங்கப்பூர் தனது இத்தொழில் நுட்பத்தை மிகப்பெரிய நாடாகிய சீனாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது என்பது வியப்புக்குரிய செய்தியாகும்.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக