வெள்ளி, ஜனவரி 28, 2011

மண்ணும், மரமும், மனிதனும். - அத்தியாயம் 12


ஆக்கம்.இ.சொ.லிங்கதாசன் 
கம்போடியாவில் பெரிய கோவிலுக்கருகில் பனையும் வடலிகளும் 

கடந்த சில வாரங்களாக இத்தொடரில் 'கிறிஸ்துமஸ்' மரத்தைப் பற்றியும், இலங்கை 'மண்ணில்' ஆங்கிலேய ஆட்சியில் விளைந்த சில அனுகூலங்களையும் பார்த்தோம். அனுகூலங்களில் ஒன்றிரண்டைப் பட்டியலிட்டபோதும், பிரதிகூலங்களை(Disadvantages) பட்டியலிடாமல் தவிர்த்தமைக்கான காரணத்தை கூறவேண்டிய கடப்பாடு அடியேனுக்குள்ளது. அதாவது ஆங்கிலேய ஆட்சியில் ஏற்பட்ட தீமைகளை பட்டியலிட்டால் கட்டுரையின் திசை மாறிவிடும். அதேபோல் போர்த்துக்கேய, ஒல்லாந்த ஆட்சிகளைவிட இலங்கை மண்ணிலும், மனிதர்கள் மத்தியிலும் நன்மைகளை ஓரளவுக்கேனும் தந்த ஆட்சி என்றால் அது 'ஆங்கிலேய' ஆட்சி என்பதே எனது கடந்த வார அத்தியாயத்தின் கருப் பொருளாக இருந்தது.


பிள்ளையோ பிள்ளை

எமது மக்கள் மண்ணை மட்டும் நேசிக்கவில்லை, மரங்களையும் நேசிக்கிறார்கள், பறவைகள், மிருகங்கள், பிராணிகள் என அத்தனையையும் நேசிக்கிறார்கள் என்பது நீங்களும் நானும் அறிந்த ஒரு விடயமே, ஆனால் சிறு வயது முதலே என்னை ஆச்சரியப் படவைத்த தமிழ் மக்களின் 'சொல்வழக்கு' பற்றி இந்த வாரம் சிறிது ஆராய இருக்கிறேன். முதலாவதாக எமது கற்பக தருவாம் பனை மரத்தை எடுத்துக் கொண்டால், அது பாண்டியர்களின் கொடியிலும், கம்போடியாவின் தேசியச் சின்னமாகவும், அதேவேளை  உலகின் மிகப்பெரிய சிவன் கோவிலாகவும் விளங்கிய(தற்போது அது பௌத்த கோவிலாக மாற்றப்பட்டு விட்டது) கம்போடியாவின்  'அங்கோர் கோயில்'(ankor  wat) அருகில் நின்று கொண்டிருப்பதால் உலகின் கண்களிலும், புகைப்படக் கருவிகளிலும்(Camera) நின்று 'தமிழர் ஆட்சியை' உலகிற்கு எடுத்தியம்பிக்  கொண்டிருக்கிறது. கம்போடியாவைத் தமிழர்கள்(சோழர்கள்) ஆண்டார்கள் என்ற வரலாற்று நிகழ்வை இத்தொடரின் பிறிதொரு அத்தியாயத்தில் ஆராய இருக்கிறேன்.




சரி பனை மரத்திற்கும், இத்தொடருக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா?காரணம் இருக்கிறது. பனையில் இளமையானதைத் தமிழ் மக்கள் 'வடலி' என்று அழைப்பது/கூறுவது வழக்கம். ஆனால் தென்னையில் இளமையானதைத் 'தென்னங்கன்று' என்று கூறுவார்கள். இது என்னை ஆச்சரியப் படுத்தவில்லை, ஆனால் தமிழ் மக்களில் பெரும்பாலானோர்(விசேடமாக இலங்கைத் தமிழர்) தென்னை மரத்தைத் 'தென்னம்பிள்ளை' என்றல்லவா கூறுகிறார்கள். இது ஆச்சரியமான ஒரு விடயமல்லவா? பனையானது தமிழ் மக்களுக்கு கேட்பதை எல்லாம் தருவதால், தென்னை மரத்தை விடப் பனையின் பயன்கள் அதிகம் என்பதால் அது தமிழில் 'கற்பகதரு' எனப் பெயர் பெற்றது நியாயமானதே. ஆனால் பனையைத் தென்னையை விட அதிகம் நேசிக்கும் தமிழ் மக்கள் பனையை ஒருபோதும் 'பனைப்பிள்ளை' என்று கூறுவதில்லையே. இங்குதான் நம் 'தமிழன்னை' சற்றுத் தடுமாறுகிறாள். இதைப் போலவே 'பாக்கு மரத்தையும்' யாழ் மாவட்டத்தின் சில பகுதிகளில் 'கமுகம்பிள்ளை' என்று கூறுகின்ற வழக்கம் உள்ளது. குறிப்பாக வலிகாமம் கிழக்கு, வடக்கு பகுதி மக்கள் பாக்கு மரத்தை  'கமுகம்பிள்ளை' என்றே கூறுவார்கள். இதற்கான காரணம் யாது? என்று அப்பகுதி மக்களில் எவரேனும், அல்லது தமிழ்ப்புலமை மிக்கோர் விளக்கினால் நன்று.

.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.


1 கருத்து:

uthayan சொன்னது…

நாம் எபவும் நல்ல சந்தோமாக அடுத்தநாடுகளை அறிய செய்யும் அந்திமாலைக்கு மேன்மலும் ஆக்கங்களை தர எதிர்பார்க்கிறோம்







நாம் எபவும் நல்ல சந்தோமாக அடுத்தநாடுகளை அறிய செய்யும் அந்திமாலைக்கு மேன்மலும் ஆக்கங்களை தர எதிர்பார்க்கிறோம்




we like read to anthimaalai becouse of we are happy to reading to foreincounry news

கருத்துரையிடுக