வெள்ளி, பிப்ரவரி 04, 2011

மண்ணும், மரமும், மனிதனும் - அத்தியாயம் 13

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
இதைப் போலவே 'பாக்கு மரத்தையும்' யாழ் மாவட்டத்தின் சில பகுதிகளில் 'கமுகம்பிள்ளை' என்று கூறுகின்ற வழக்கம் உள்ளது. குறிப்பாக வலிகாமம் கிழக்கு, வடக்கு பகுதி மக்கள் பாக்கு மரத்தை  'கமுகம்பிள்ளை' என்றே கூறுவார்கள். இதற்கான காரணம் யாது? என்று அப்பகுதி மக்களில் எவரேனும், அல்லது தமிழ்ப்புலமை மிக்கோர் விளக்கினால் நன்று.


பெயர் சூட்டலில் வஞ்சகம் ஏன்?
சரி தென்னை, பனையை விட்டுவிடுவோம், முக்கனிகளில் நமது பெயர் சூட்டல் எவ்வாறு முரண்படுகிறது என்று பார்ப்போம். மா,பலா போன்ற கனி தரும் மரங்களின் இளையதை 'கன்று' எனக் கூறும் நமது தமிழ் மக்கள் வாழையின் இளையதை 'குட்டி' என்றல்லவா கூறுகிறார்கள், தமிழில் எந்த 'உருபு', அல்லது எந்த 'ஆகுபெயர்' இதற்கு இடமளித்தது என்பதுதான் என் மனதைக் குடையும் 'மில்லியன் டொலர் கேள்வி'. இலங்கையின் தமிழ் மக்கள் 'வாழைக்குட்டி' என்றே அழைக்கின்றனர், ஆனால் தமிழ் நாட்டில் 'வாழைக் கன்று' என அழைக்கும் மக்கள் எங்கேனும் இருப்பார்கள் என்பதே எனது ஊகம். காரணம், கவியரசு கண்ணதாசன் அவர்கள் 'ஆலயமணி' திரைப்படத்தில் எழுதிய "பொன்னை விரும்பும் பூமியிலே" என்று தொடங்கும் பாடலில் ஓரிடத்தில்:
" வாழைக்கன்று அன்னையின் நிழலில் 
வாழ்வதுபோல வாழவைத்தாயே"   என்று தன்னைப் பராமரிக்கும் பெண்ணின் பாசத்தில் உருகும் 'கதாநாயகனின்' உள்ளத்தை நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறார். அந்த வகையில் 'வாழைக் கன்று' எனும் சொற்பதம் தமிழ் நாட்டில் உபயோகத்தில் இருக்கலாம் என்பது எனது நம்பிக்கை.
எல்லாமே போகட்டும், நாம் சிறுவயதில் பள்ளியில் 'மயிலிறகு' ஒன்றை எடுத்து நம் தலையில் தேய்த்திருக்கும் 'நல்லெண்ணையில்' சிறிதளவு தடவி 'அம்மயிலிறகை' பாடப் புத்தகங்களுக்குள் வைப்போம், சில நாடகளில் அம்மயிலிறகு 'குட்டி' போடும் என்று குருட்டுத் தனமாக நம்பினோம். இங்கும் எமது நம்பிக்கையை விடவும், எமது 'சொல்லடை' அல்லவா முரண்பட்டு நிற்கிறது. காரணம் மயலின் இளையது 'மயில் குஞ்சு' அதை நாம் கண்ணால் காண்பதே அபூர்வம் என்ற விபரம் ஒருபுறமிருக்கட்டும், மயில் குஞ்சை நாம் ஒருபோதும் 'மயில் குட்டி' என்று கூறியதில்லையே? அவ்வாறிருக்கையில் 'மயிலிறகு' மட்டும் எவ்வாறு 'குட்டி' போடும்? நாம் அவ்வாறு கூறியதை தமிழாய்ந்த/தமிழறிந்த யாருமே, அவ்வாறு கூறுவதில் 'இலக்கணப் பிழை' உள்ளது என்று கூறவுமில்லை, திருத்தவுமில்லையே.
சரி மரங்கள், தாவரங்கள் போன்றவற்றுக்குப் பெயர் வைத்ததில்தான் இவ்வாறு குளறுபடிகள் நடந்தது எனக் கொள்ள முடியாது. பிராணிகளுக்கு பெயர் சூட்டுவதில் எத்தனை வஞ்சகம் நிகழ்ந்திருகிறது. எலியின் 'இளையதை' 'எலிக்குஞ்சு' என அழைக்கும் எம் தமிழ் சமூகம் 'கீரியின்' இளையதை 'கீரிப்பிள்ளை' என்றல்லவா அழைக்கிறது. இது மிகவும் முரண்பாடாகவல்லவா உள்ளது. 'கீரிக்குஞ்சு' என அழைத்த/எழுதிய யாரையும் நான் இதுவரை கண்டதில்லை. இதேபோல்தான் அணிலின் இளையது இலங்கையில் அணிற்குஞ்சு' எனவும் தமிழ்நாட்டில் அணிற்பிள்ளை'(அணிப்பிள்ளை) எனவும் அழைக்கப் படுகிறது. இதுவும் தமிழிலுள்ள முரண்பாடுகளில் ஒன்றாக எனக்குப் படுகிறது.


 இறுதியாக ஒரு வினோதமான உதாரணத்தை உங்கள்முன் வைக்கிறேன். கிளி ஒரு பறவை அதன் இளையது எப்போதுமே 'கிளிக்குஞ்சு' என்றுதானே இருக்க வேண்டும். பேச்சு வழக்கிலும், ஏன் இலக்கியங்களிலும் கூட 'கிளிப்பிள்ளை' என்றல்லவா இருக்கிறது. சரி விவாதத்திற்காக கிளி 'பேசும்' என்பதற்காக அதைக் 'கிளிப்பிள்ளை' என்கிறோம் என வைத்துக் கொண்டால் 'மைனாவும்' பேசும் வல்லமை கொண்டதல்லவா? நாம் ஒருபோதும் 'மைனாப்பிள்ளை' என்று கூறுவதில்லையே அது ஏன்?
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

1 கருத்து:

suthan சொன்னது…

real;y very nice article i am every reading this news

கருத்துரையிடுக