சனி, பிப்ரவரி 12, 2011

மண்ணும், மரமும், மனிதனும். அத்தியாயம் 14

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
Cartoon Parrotகிளி ஒரு பறவை அதன் இளையது எப்போதுமே 'கிளிக்குஞ்சு' என்றுதானே இருக்க வேண்டும். பேச்சு வழக்கிலும், ஏன் இலக்கியங்களிலும் கூட 'கிளிப்பிள்ளை' என்றல்லவா இருக்கிறது. சரி விவாதத்திற்காக கிளி 'பேசும்' என்பதற்காக அதைக் 'கிளிப்பிள்ளை' என்கிறோம் என வைத்துக் கொண்டால் 'மைனாவும்' பேசும் வல்லமை கொண்டதல்லவா? நாம் ஒருபோதும் 'மைனாப்பிள்ளை' என்று கூறுவதில்லையே அது ஏன்?


சரி இவையெல்லாமே ஒரு புறமிருக்கட்டும் எம்மவர் எதற்கெடுத்தாலும் மரத்தை ஒரு இழிவான பொருளாக, அல்லது உணர்வில்லாத ஒரு 'படைப்பு' (Creation) என்ற கருத்தில் சொல்லாடல் செய்வதற்கு என்றுமே தயங்கியதில்லை, உதாரணமாக தமிழ் மக்களால் இன்றும் போற்றித் துதிக்கப்படும், வான்புகழ் வள்ளுவர் என்ன கூறுகிறார்?
"அரம்போலும் கூர்மையரேனும் மரம்போல்வர் 
மக்கட் பண்பில்லாதவர்"
என்றல்லாவா கூறுகிறார். அதாவது 'அரம்' போலக் கூர்மையான அறிவு படைத்தவராக இருந்தாலும், அம்மனிதனிடத்தில் 'பண்பு' என்ற ஒன்று இல்லாவிட்டால் அம்மனிதன் 'மரத்திற்குச்' சமமானவன் என்கிறார் வள்ளுவர் பெருமான்.
 இதே கருத்தை நான் சிறுவனாக இருந்த காலத்தில் எனது பேத்தியார், வேறு ஒரு பழமொழியின்மூலம் அடிக்கடி கூறக் கேட்டிருக்கிறேன் (அது ஒரு பழமொழி என்பதே இன்றுவரை எனது நம்பிக்கையாகும்) அப்பழமொழி இதுதான்:
"நின்றான், குறிப்பறியான் மாட்டாதவனே மரம்"
மேற்படி பழமொழியை இலகு தமிழுக்கு மொழி பெயர்த்தால் நமக்குக் கிடைக்கும் விடை இதுதான். "எந்த ஒரு விடயத்தையும், குறிப்பாக உணர்த்தினால், அதைப் புரிந்து கொள்ள முடியாதவன், மரத்திற்குச் சமமானவன்".

சரி இவ்வாறு நம் முன்னோர்களின் கருத்துப்படி உணர்வு குறைந்தோர், முற்றாகப் பண்பை இழந்தோர் மரமாகக் கருதப்பட வேண்டியவர்கள் என்ற கருத்துடன் நான் உடன்படுகிறேன். ஆனால், மரத்திற்கு 'உயிர்' உள்ளது, அதற்கு  'உணர்வு' கிடையாது என்ற எம்மவர்களின் கருத்தைத்தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதற்கும் காரணம் இருக்கிறது. எம்மவர்கள் மரம், செடி, கொடிகளுக்கு உயிர் இருக்கிறது, ஆனால் அவற்றிற்கு 'உணர்வு' கிடையாது என்று கூறுகிறார்களே, இது உண்மையா?(சரியா?) என்ற கேள்விக்கு விடை தேடினேன். கிடைத்த விடையோ என்னை மிகவும் பிரமிப்பில் ஆழ்த்தியது.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக