சனி, மார்ச் 05, 2011

மண்ணும், மரமும், மனிதனும். அத்தியாயம் - 16

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன்
புளி மாமரத்தின் ஒரு கிளையையும், இனிப்பு மாமரத்தின் ஒரு கிளையையும்  ஒட்டி ஒரு புதிய மாங்கன்று அல்லது மாமர இனம் உருவாக்கப் படுகிறதல்லவா? இதுவும் மரபணுக்களை மாற்றும் ஒரு திட்டம்தானே?  இவ்வாறு இயற்கைக்கே சவால் விடுமளவிற்கு பல அரிய உண்மைகளைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் தாவரங்களுக்கு உணர்வு இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்விக்கு பதிலே கூறவில்லையே அது ஏன்? எவராவது ஒரு விஞ்ஞானி தாவரங்களுக்கு உணர்வு இருக்கிறதா என்று கண்டுபிடித்தாரா? ஆம் ஒரு விஞ்ஞானி கடந்த நூற்றாண்டில் எம் மத்தியில் வாழ்ந்தார், அவர் இக்கேள்விகளுக்கு விடை கண்டு பிடித்தார்.

சேர்.ஜகதீஷ் சந்திர போஸ் (1858-1937)
இந்த மாபெரும் மனிதனை / விஞ்ஞானியை எமது நவீன உலகம் அடியோடு மறந்தே போய்விட்டது எனலாம். நான் இவ்வாறு கூறுவதற்கும் காரணம் இருக்கிறது. ஏனெனில் ஒரு சாதாரண இயற்பியல்(Physics) விதியையோ, அல்லது கணிதச் சூத்திரத்தையோ(theory /formula) கண்டுபிடித்த விஞ்ஞானிகளை  இச் சமுதாயம் மறக்கவில்லை, சமுதாயத்திற்கு மிகவும் உதவக்கூடிய ஒரு இலத்திரனியல் சாதனத்தையோ(electrical equipment), இயந்திர சாதனத்தையோ கண்டு பிடித்த விஞ்ஞானிகளை இச் சமுதாயம் இன்று வரை மறக்காமல், அவர்களது பிறந்த தினம், பெற்றோர், வாழ்ந்த நாடு, மறைந்த தினம் போன்ற இன்னோரன்ன விடயங்களையும் குறித்து வைத்துள்ளது. அவை வரலாற்றின் பக்கங்களில் பதிவாகியுள்ளதோடு, பாடப்புத்தகங்களிலும் பதிவாகியுள்ளது. இவ்வாறிருக்கையில் இந்த 'விஞ்ஞானி' மட்டும் வரலாற்றின் பக்கங்களிலிருந்தும், மனிதர்களின் உதடுகளில் இருந்தும் ஏறக்குறைய மறக்கப் பட்டதற்கான காரணம் யாது? என வினவினால் கிடைக்கும் விடை ஒன்றுதான். அதாவது முதலில் இவர் ஒரு 'இந்தியர்' என்பதும், ஆசிய நாட்டவர் என்பதுமே அதற்கான காரணமாகும். இவர் பிறந்து, கல்வி கற்று, ஆராய்ச்சிகள் செய்து வெளிப்படுத்திய, அல்லது  கண்டுபிடிப்புகளை வெளியிட்ட காலப்பகுதியில் 'இந்தியா' என்ற மிகப்பெரிய நாடு பிரித்தானிய சாம்ராச்சியத்திற்குள் அடிமைப் பட்டுக் கிடந்தது. அது மட்டுமல்லாமல் இரண்டு உலகப் போர்களும் இவர் வாழ்ந்த காலப் பகுதிக்குள்ளேயே நிகழ்ந்தன. அதேபோல், பிரித்தானியப் பேரரசுக்கும் இந்திய மக்களுக்கும் இடையில் அதிக 'விரிசலை' ஏற்படுத்திய இந்திய சுதந்திரப் போரும் இவர் வாழ்ந்த காலப் பகுதியிலேயே நிகழ்ந்தது எனலாம்.
மகாத்மா காந்தி தொடக்கம், பல இந்தியத் தலைவர்களும் இங்கிலாந்துக்குச் சென்று கல்விகற்றுப் பட்டம் பெற்றதுபோல் போஸ் அவர்களும் இங்கிலாந்தில் உள்ள 'கேம்பிரிட்ஜ்' போன்ற பிரபலமான பல்கலைக் கழகங்களில் கல்வி கற்றார். சாதாரணமாக ஒரு விஞ்ஞானி ஒரு துறையில் மட்டும் பட்டம் பெறுவது வழக்கம். ஆனால் திரு.போஸ் அவர்கள் உயிரியல், தாவரவியல், இயற்பியல்(பௌதீகவியல்) வரலாற்றியல் போன்ற பல துறைகளிலும் பட்டம் பெற்றிருந்தார். சாதாரண ஒரு இந்தியக் குடும்பத்தில் பிறந்த ஒரு மனிதனால் அக்காலத்திலிருந்த சூழ் நிலையில் ஒரு பட்டப் படிப்பையே இங்கிலாந்தில் படித்து முடிப்பதற்குப் பல போராட்டங்களை வாழ்வில் சந்திக்க வேண்டியிருந்த நிலையில், போஸ் அவர்களால் பல பட்டப் படிப்புகளை இங்கிலாந்தின் பிரபலமான பல்கலைக் கழகங்களில் படித்து முடித்தல் எவ்வாறு சாத்தியமானது? "அறிவிற்கு இவ்வுலகம் அடிமையானது", "இவ்வுலகை அறிவுதான் ஆளுகிறது" ("knowledge is wealth", "Knowledge is power") எனும் ஆங்கிலப் பழமொழிகள்  இங்குதான் நினைவு கூரப் படுகிறது.
(தொடரும்)  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக