புதன், மார்ச் 23, 2011

தாரமும் குருவும்...,

இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 1.6

பாலர் வகுப்பு(Nursery/kindergarten)
அந்த ஆசிரியையை ஒரு 'தேவதை' என்று குறிப்பிட்டேன் அல்லவா? அடுத்து இயல்பாகவே ஒரு கேள்வி எழுவது இயற்கை. அதுதான் 'ஏன்?' என்ற கேள்வி. சரி அந்தக் கேள்விக்கும் என்னிடம் பதில் இருந்துதானே ஆகவேண்டும். சரி எனது பதில்களை பட்டியல் இடுகிறேன். அவர் ஒரு தேவதையா? இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.
  • குடிநீருக்குக் கூட பல கிலோமீட்டர்கள் தொலைவு அலைய வேண்டிய வரண்ட கிராமத்து மண்ணில், உப்புக்காற்றைச் சுவாசித்தபடி வாழும் மனிதர்கள் மத்தியில் அத்தகைய ஒரு அழகியை, 'தேவதையைக்' காண்பது அரிதிலும் அரிது.
  • யாழ் மாவட்டத்தின் கிராமங்களில் கல்வி புகட்டும் ஆசிரியர்களில் பெரும்பாலானோர் பணக்காரப் பிள்ளைகள் மற்றும் சக ஆசிரியர்களின் பிள்ளைகளை விசேட கவனத்துடனும், சாதாரண நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளை வேறு விதமாகவும், ஏழைப் பிள்ளைகள் மற்றும் சாதியால் தாழ்த்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளை மிகவும் 'தரக் குறைவாகவும்' நடத்துவது 'எழுதப்படாத விதி' ஆகும். இவ்வாறிருக்கையில் அந்த மேட்டுக்குடியைச் சேர்ந்த(இது எனது ஊகம் மட்டுமே) 'அழகிய தேவதை' என் போன்ற ஒரு 'ஏழையின் பிள்ளையை' கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டார் என்றால் என்னைப் பொறுத்தவரை அவர் தேவதையா இல்லையா.?
  • பாலர் வகுப்பு என்பது வெறுமனே பிள்ளைகள் பராமரிக்கப் படும் இடம் மட்டுமன்றி, குழந்தைகளின் 'தலைவிதியே' அங்குதான் எழுதப் படுகிறது என்பதை உணர்ந்து, என்னை மட்டுமன்றி, அந்த வகுப்பில் இருந்த அத்தனை பிள்ளைகளையும் தன் பிள்ளைகளாகவே 'அன்பொழுக' கவனித்துக் கொண்ட அப்பெண்மணி தேவதையா இல்லையா?
இவ்வாறு எனது பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.
(தொடரும்) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக