சனி, ஏப்ரல் 23, 2011

மண்ணும், மரமும், மனிதனும். - அத்தியாயம் 18

விஞ்ஞானி திரு.சந்திரபோஸ் 
விஞ்ஞானி திரு ஜகதீஷ் சந்திர போஸ் அவர்கள் தனது கண்டுபிடிப்புகள் எதற்குமே காப்புரிமை வாங்காமலே இருந்துவிட்டார்.இத்தகைய ஒரு விஞ்ஞானியை இக்காலத்தில் இம்மண்ணில் காண முடியுமா? இத்தகைய ஒரு மனிதன் இக்காலத்தில் நம் மத்தியில் வாழ்ந்தால் "பொழைக்கத் தெரியாத புள்ள" எனப் பெயர் வாங்கியிருப்பார் அல்லவா? சரி இவர் மட்டும்தான் தனது கண்டுபிடிப்புகளுக்கு 'காப்புரிமை' வாங்காது விட்ட விஞ்ஞானியா? என வரலாற்றின் பக்கங்களில் தேடிப் பார்த்தபோது, இன்னும் இரண்டு விஞ்ஞானிகளின் பெயர்களை மட்டுமே வரலாற்றின் பக்கங்களில் காண முடிந்தது.
அதாவது X-ray கருவியைக் கண்டுபிடித்த ஜேர்மனிய விஞ்ஞானியாகிய ரொன் ஜன்(Wilhelm Conrad Röntgen) மற்றும் காந்தப் புல அதிர்வுகளுக்காக நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு விஞ்ஞானியாகிய பியரி கியூரி(Pierre Curie) ஆகியோரே அந்த இரு விஞ்ஞானிகள் ஆவர். இந்த இரு விஞ்ஞானிகள் சம்பந்தமாக சில தகவல்களையும் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இவர்களில் நான் முதலில் குறிப்பிட்ட ரொன் ஜன் என்ற ஜேர்மனிய விஞ்ஞானி தனது கண்டுபிடிப்பாகிய 'எங்கள் உடலைப் படமெடுக்கும்' X-ray கருவிக்குக் காப்புரிமை வாங்காது விட்டு விட்டார். "மனித சமுதாயத்திற்கு நன்மை பயக்கவே இதனைக் கண்டுபிடித்தேன். ஆகவே இதிலிருந்து கிடைக்கும் வருமானமோ, லாபமோ எனக்கு வேண்டாம்" என்று கூறி விட்டார். உலகின் பெரும்பாலான நாடுகளில் நமது உடலின் உட்பகுதியை(உள்ளுறுப்புகளை) படம் எடுக்கும் முறையை X-ray என்றே குறிப்பிடுகின்றனர். ஆனால் டேனிஷ் மக்கள்(டென்மார்க் மக்கள்) தமது மொழியில் மேற்படி விஞ்ஞானியைக் கௌரவிக்கு முகமாக X-ray படத்தை 'ரொன் ஜன் படம்'(Røntgenbillede) என்றே அழைக்கின்றனர். டேனிஷ் மக்கள் தமது மொழியால் ஒரு விஞ்ஞானியைக் கௌரவிக்கும் விதம் என்னை நெகிழச் செய்கிறது. இவ்வாறு ஏனைய நாட்டு மக்களும் தமது மொழியில் விஞ்ஞானிக்கு 'கௌரவம்' வழங்கியுள்ளார்களா? என்பதை நானறியேன். அவ்வாறு தெரிந்தால் வாசகர்கள் எனக்கு எழுதலாம்.
அதேபோல் காந்தப் புல அதிர்வுகளையும், மக்னீசியம் என்ற 'இரசாயனத்தின்' பயன்பாட்டையும் பற்றிக் கண்டுபிடித்து நோபல் பரிசு வாங்கிய பிரெஞ்சு விஞ்ஞானியாகிய 'பியரி' என்பவரும், வறுமையில் வாடியவர் என்பதுடன், நமக்கெல்லாம் சிறு வயதிலேயே பாடப் புத்தகங்களில் நன்கு அறிமுகமான 'ரேடியத்தைக்' கண்டுபிடித்த பெண் விஞ்ஞானியாகிய 'மேரி கியூரி அம்மையாரின்' கணவர் என்பதும், இந்தத் தம்பதிகள் தமது ஆராய்ச்சிக் காலங்களில் வீட்டு வாடகை செலுத்துவதற்குக் கூட பணம் கிடைக்காமலும், உணவு, வீட்டை வெப்பமாக வைத்திருப்பதற்கு தேவைப்படும் விறகு போன்றவற்றை வாங்குவதற்குக் கூட வழியில்லாது திண்டாடினர் என்பதை 'வரலாறு' நமக்குக் கூறுகிறது.
இந்த நிலையில் இந்திய விஞ்ஞானி திரு.போஸ் அவர்களைப் போல், தனது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை(Patent right) வாங்காது விட்ட பிரெஞ்சு விஞ்ஞானி 'பியரி' அவர்களுக்கு அறிவியல் உலகம் தலைவணங்கும் அதே வேளை மனித சமுதாயம் அவருக்கு 'பிழைக்கத் தெரியாத மனிதன்' என்று பட்டம் சூட்டியிருப்பது வேதனையைத் தருகிறது.
(தொடரும்)

உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக