வெள்ளி, மே 20, 2011

உங்களுடன் சில வார்த்தைகள்

அன்பார்ந்த வாசகப் பெருமக்களே!

கடந்த 54 நாட்களாக அந்திமாலையில் 'காற்றில் கரைந்தவர்கள்' எனும் தலைப்பில் இரண்டாம் உலக மகா யுத்தத்தினால் உலக சமுதாயத்திற்கு ஏற்பட்ட இழப்புகளைத் தினமும் ஒரு நாடு எனும் அடிப்படையில் புள்ளி விபரங்களாக உங்களுடன் பகிர்ந்து கொண்டோம்.இரண்டாம் உலக மகா யுத்தம் முடிவடைந்து ஏறத்தாழ அறுபத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அதன் பின்னரும் பல யுத்தங்கள் பூமிப்பந்தில் பல லட்சக் கணக்கான மனித உயிர்களைக் காவுகொண்டுவிட்ட இந்த நூற்றாண்டில் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் இழப்புகளைத் திரும்பிப் பார்ப்பதற்கான அவசியம் யாது? என உங்களில் சிலரேனும் மனதில் கேள்வி எழுப்பியிருக்கலாம். 
இரண்டாம் உலக யுத்தம் ஏன் ஏற்பட்டது? என்பது உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கலாம். இந்த உலக, மனித சமுதாயமானது இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கான காரணமாக 'ஹிட்லரின்' பேராசை அல்லது நாடு பிடிக்கும் ஆசையை இன்றுவரை கூறி வருகிறது.எவராவது இன்றுவரை ஹிட்லரும் ஜேர்மனிய இராணுவமும் அவ்வாறானதொரு நிலைப்பாட்டிற்குத் தள்ளப்பட்ட காரணிகளை ஆராய்ந்தார்களா என்றால் 'இல்லை' என்பதே பதிலாகக் கிடைக்கும். முதலாம் உலகப் போரில் தோல்வியடைந்து வறுமையின் விளிம்பில் நின்ற 'ஜேர்மனியிடம்' உலக சமுதாயம் கேட்ட இழப்பீட்டுத் தொகை, ஜேர்மனி எனும் நாட்டை விற்றாலே கிடைக்காத தொகையாகும். தோற்றுப் போன ஒருவனிடம் வெற்றி பெற்றவன் வைத்ததே 'நீதியாகும்' எனும் பொன்மொழி இங்கு நோக்கத் தக்கது. இந்த நிலையிலேயே அண்மை ஆண்டுகளில் உலகில் ஏற்பட்டிருக்கும் 'பொருளாதார நெருக்கடி' போலவே 1930 களின் இறுதிப் பகுதியிலும் உலகப் பொருளாதாரம் அதல பாதாளத்தில் சரிந்து வீழ்ந்தது. முதலாம் உலகப் போரில் வெற்றிபெற்ற நாடுகள் இந்தச் சரிவை ஒருவாறு சமாளித்து நிற்க போரில் தோற்றுப் போன நாடாகிய 'ஜேர்மனி' இந்தப் பொருளாதாரச் சரிவை எதிர்கொள்ள முடியாமல் துவண்டு போனது.


"வெற்றிக்குப் பல நண்பர்கள், தோல்வி ஒரு அநாதை" என்ற அறிஞரின் பொன்மொழி இங்கு நினைவு கூரத் தக்கது. ஜெர்மானியப் பொருளாதாரம் படுகுழியில் வீழ்ந்தது. வராலாற்றிலேயே சந்திக்காத 'பண வீக்கத்தை' ஜெர்மானியப் பொருளாதாரம் சந்தித்தது. ஜெர்மனியின் 'டொச் மார்க்கின்' பெறுமதி வரலாறு காணாத வகையில் வீழ்ந்தது. ஒவ்வொரு உழைப்பாளியும் தனது மாதாந்த வருமானமாக பல லட்சம் 'டொச் மார்க்குகளைப்' பெற்றார். ஒவ்வொரு அரசாங்க ஊழியர்களும் தமது மாதாந்தச் சம்பளத்தை நூற்றுக்கணக்கான கட்டுகளாகக் கட்டி 'தள்ளு வண்டியில்' வீட்டிற்கு எடுத்துச் சென்றார்கள். ஒரு இறாத்தல் பாணின்(Loaf of Bread) விலை இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட டொச் மார்க்குகளாக அதிகரித்தது. இப்படியான துன்பியல் சூழலில் சிக்கித் தவித்த ஜேர்மனிய மக்கள் மத்தியிலேயே 'ஹிட்லர்' எனும் சர்வாதிகாரியினால் ஆட்சியையும், இராணுவத்தையும் கைப்பற்ற முடிந்தது.
இரண்டாம் உலக மகா யுத்தம் ஏற்படுவதற்கு 'ஹிட்லர்' மட்டுமே காரணமல்ல. நாம் ஒவ்வொருவருமே காரணமாவோம். நம் மத்தியில் அன்பு, கருணை, இரக்கம், சகிப்புத் தன்மை போன்றவை அகன்று பழிவாங்கும் உணர்வு, வெறுப்பு, இனத் துவேசம், மதத் துவேசம், வஞ்சனை, சூது, ஆத்திரம்,ஆசை,பொறாமை போன்ற குணங்கள் தலை விரித்தாடியமையே இரண்டாம் உலகப் போருக்குக் காரணம் என்பதை நாம் அனைவரும் மறந்துவிட்டோம்.மேற்படி போரினால் இரண்டு கோடிக்கு மேற்பட்ட படைவீரர்களும், நான்கு கோடிக்கு மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்களும், ஐம்பது லட்சத்திற்கு மேற்பட்ட யூத மக்களுமாக ஏழு கோடிக்கு மேற்பட்டோரை இவ்வுலகம் இழந்தது. பொது மக்களுக்கு, அரசுகளுக்கு ஏற்பட்ட சொத்து இழப்புகள் சொல்லில் அடங்காது.

இவற்றிற்கெல்லாம் காரணம் 'மனித சமுதாயத்தின்' ஒரு அங்கமாக விளங்கும் நாம்தான் என்பதை நாம் என்றைக்கும் மறத்தலாகாது. வெறுப்பும்,விரக்தியும்,ஏமாற்றமும்,அடக்குமுறையும்,பழிவாங்கும் உணர்வும்,கோபமும் குடும்பத்திலிருந்தே ஆரம்பிக்கிறது என்பதை நாம் அனைவரும் மறத்தலாகாது.நமது குடும்பங்களில் அன்பையும் அமைதியையும் விதைப்போம். ஒருவரை ஒருவர் அடக்கியாளுவதைக் கைவிடுவோம். நமது குடும்பத்தில் அன்பும், இன்பமும், அமைதியும் ஆட்சிபுரிய உழைப்பது நம் ஒவ்வொருவருடைய கடமையுமாகும். அன்பை விதைப்போம்,அன்பை அறுவடை செய்வோம்.
"மூன்றாவது உலக யுத்தம் ஏற்படாமல் தடுப்பது நம் ஒவ்வொருவருடைய கைகளிலும் உள்ளது".
சாந்தியும், சமாதானமும், சுபீட்சமும் நிறைந்த உலகை உருவாக்குவோம்.
வாருங்கள் ஒன்றுபட்டு உயர்வோம்.


இவ்வண்ணம் 
இ.சொ.லிங்கதாசன்
ஆசிரியர் 

1 கருத்து:

தி.பரஞ்சோதிநாதன், டென்மார்க். சொன்னது…

எம்மில் பலருக்கு இரண்டாம் உலக போர் நடந்தது என்று மட்டுமே தெரியும். எவ்வளவு பேர் மாண்டார்கள் என்பதோ, ஏன் அந்த யுத்தம் மூண்டது என்பதோ தெரியாது. சகல விடயங்களையும் தெரிவித்த அந்திமாலைக்கு நன்றிகள்.

கருத்துரையிடுக