வெள்ளி, ஆகஸ்ட் 05, 2011

பஞ்சாங்கம் பார்த்துச் சொல்லவா?

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
நேற்றைய தினம் (4.08.2011) அந்திமாலையில் வெளியாகிய திரு.ஜோ மில்டன் அவர்களது 'கம்போடியப் பயணக் கட்டுரையாகிய' 'மண்டையோடுகளின் நடுவில்'  எனும் கட்டுரைக்குக் கருத்துரை எழுதும்போது கம்போடிய மொழியைப் பற்றி வாசகர்களிடம் சிறிது விளக்கம் கூறியிருந்தேன். 'கம்போடிய' எழுத்துக்கள் 'சிங்கள' எழுத்துக்கள் போலத் தோற்றமளிக்கும் எனவும் கூறியிருந்தேன். அதற்கு ஆதாரமாக எந்தவொரு 'கம்போடிய மொழி' ஆவணத்தையும் இணைக்க  முடியாமற் போய் விட்டது. எங்கள் வீட்டில் ஒரு 'தேடுதலுக்குப் பிறகு', கடந்த வருடத்தில் எனக்குக் கிடைத்த ஒரு 'திருமண அழைப்பிதழை' வாசகர்களின் பார்வைக்குத் தருகிறேன். கம்போடிய மொழி 'சிங்கள மொழியை' ஒத்ததாகக் காணப்படுகிறதா? இல்லையா? என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். மேற்படி அழைப்பிதழின்மீது ஒரு தடவை அழுத்தினால்(கிளிக் செய்தால்) பெரிய படமாகப் பார்க்க முடியும். மேற்படி திருமணம் கடந்த ஆண்டில், டென்மார்க்கில், நான் வசிக்கும் ஷேபி நகரத்தில் நடைபெற்றதாகும், மணமகன் டேனிஷ் (டென்மார்க்) இனத்தைச் சேர்ந்தவர். மணமகள் கம்போடியா நாட்டைச் சேர்ந்தவர். மேற்படி திருமண அழைப்பிதழில் இடது பக்கத்தில் காணப் படுவது மணமகனின் பெயராகும். மணமகனின் பெயரை கிளைவ்ஸ் புட்சாவ் ஊல்சன் எனவும் மணமகளின் பெயரை ராணி மொக் ஊல்சன் எனவும் வாசிக்கவும்.
மற்றும் கம்போடியர்களின் கலை கலாச்சாரம் பற்றிய மேலும் சில தகவல்கள் உங்களுக்காக:
  • தமிழர்களின் புத்தாண்டு (தமிழ்ப் புதுவருடம்) ஏப்பிரல் பதின்மூன்று அல்லது பதினான்காம் தேதி வருவதுபோல், கம்போடியாவிலும் ஏப்பிரல் பதின்மூன்று தொடக்கம் பதினைந்தாம் தேதிக்குள் புதுவருடம் பிறக்கும். இது கம்போடியாவில் மட்டுமன்றி பர்மா, தாய்லாந்து, லாவோஸ் ஆகிய நாடுகளிலும் பின்பற்றப் படுகிறது. நாம் புது வருடத்தை ஒரு நாள் மட்டும் கொண்டாடுகிறோம். இவர்கள் மூன்று நாட்கள்(ஏப்பிரல் 13 ஆம் தேதி தொடக்கம் 15 ஆம் தேதி வரை.)கொண்டாடுகிறார்கள். இவர்கள் புது வருடத்தை 'நல்ல காலம்' என்றோ அல்லது 'தண்ணீர்த் திருவிழா' என்றோ அழைக்கின்றனர். இந்த மூன்று நாட்களும் தெருவில் போவோர், வருவோர் மீதெல்லாம் தண்ணீரை ஊற்றுவார்கள். 'தெரியாதவர்கள் மீது' குறைவான தண்ணீரையும், 'தெரிந்தவர்கள்மீது' அதிக தண்ணீரையும் ஊற்றுவார்கள். முட்டாள்கள் தினத்தில்(ஏப்பிரல் முதலாம் தேதி) நம்மை யாராவது ஏமாற்றினால் எவ்வாறு கோபிக்க முடியாதோ, அதேபோல் இத் தண்ணீர்த் திருவிழாவில் நம்மீது யாராவது தண்ணீரை ஊற்றினாலும் நாம் கோபிக்க முடியாது. இத் தண்ணீர்த் திருவிழாவின்போது ஏற்படும் சன நெரிசல், வாகன விபத்துக்கள், வாகனங்களிலிருந்து வழுக்கி விழுதல் போன்றவற்றால் தாய்லாந்துத் தலைநகர் 'பாங்கொக்கில்' மட்டும் வருடாந்தம் ஐந்நூறுக்கு மேற்பட்டவர்கள் இறந்து போகின்றனர். 
  • தமிழ் மக்கள் ஆங்கில நாட்காட்டியை (Gregorian Calendar) உபயோகித்த போதிலும் 'தமிழ் தேதி' என ஒன்றை அழைப்பிதழ்களில் எழுதுவது போல இவர்கள்(தாய்லாந்து, கம்போடிய மக்கள்) 'பௌத்த நாட்காட்டியை' உபயோகிக்கிறார்கள். இவர்களுடைய 'பௌத்த ஆண்டு' சாதாரண ஆங்கில ஆண்டிலிருந்து 543 வருடங்கள் அதிகமாகும். அதாவது தற்போது ஆங்கிலேயர்களுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, ஆனால் தாய்லாந்து, கம்போடிய மக்களுக்கு தற்போது 2554 ஆம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது மாத்திரமன்றி நாம் சுப முகூர்த்தங்களுக்குப் பஞ்சாங்கம் பார்ப்பதுபோல், இவர்களும் 'பஞ்சாங்கம்' பார்க்கிறார்கள். இவர்கள் உபயோகிப்பது வட இந்தியப் பஞ்சாங்கம் ஆகும். அது மாத்திரமன்றி இவர்களது மொழியில் சூரியன் என்பதற்கு 'பிரா ஆதித்' (தமிழில் சூரியனுக்கு 'ஆதித்தன்' என்றொரு பெயரும் உண்டென அறிவீர்கள்) எனவும், சந்திரனுக்கு 'பிரா சந் (சந்திரன் என்ற பெயரின் பாதி வருகிறதல்லவா?) பிள்ளையாருக்கு 'பிராபி கணேஷ்'('கணேசக் கடவுள்' என்று அர்த்தம்) எனவும், காளியை 'மே காளி' ('காளி அம்மா' என்று அர்த்தம்) என்றும் கூறுகின்றனர். இவ்வாறு 'பிரா' (Prah) என்றால் கடவுள் என்றோ, அல்லது 'தந்தை' என்றோ அவர்களது மொழியில் அர்த்தமாகிறது. நாமும் 'சூரிய பகவான்' என்றோ 'சந்திர பகவான்' என்றோ (குழந்தைகள் மத்தியில் 'அம்புலி மாமா') கூறுவது போல அவர்கள் 'சூரியக் கடவுள்' மற்றும் 'சந்திரக் கடவுள்' என்று கூறுகிறார்கள். 

1 கருத்து:

vetha சொன்னது…

its good for the infomation. Thank you

கருத்துரையிடுக