சனி, நவம்பர் 12, 2011

தாரமும் குருவும் . பகுதி - 5.1

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 5.1

பாலர் வகுப்பு(Nursery/kindergarten)
"சின்னப் பாப்பா எங்க செல்லப் பாப்பா" பாடலை எங்கள் 'கமலினி டீச்சர்' எங்களுக்குக் கற்றுக் கொடுத்த விதமே வித்தியாசமானது என்று இரண்டு வாரங்களுக்கு முன்னர் கூறியிருந்தேன் அல்லவா? அது என்ன ஊர் உலகத்தில் இல்லாத புதிய முறையா? என்ற ஒரு கேள்வி உங்களுக்கு எழுந்திருக்கலாம். வேறு எதுவுமில்லை பாடலைப் பாடும்போது ஒரு பிள்ளை அருகில் நிற்கும் பிள்ளையை 'சின்னப் பாப்பாவாகப்' பாவித்து, தடவி, அணைத்துக் கொண்டு பாட வேண்டும். பாடல் பாடி முடிந்ததும் சின்னப் பாப்பாவாக உபயோகிக்கப் பட்ட பிள்ளை அருகில் நின்று தன்னை அணைத்து, தடவிப் பாடல் பாடிய பிள்ளையை 'சின்னப் பாப்பாவாக' முறை மாற்றிப் பாட வேண்டும். இது ஒரு வேடிக்கையான அனுபவம். இரு தடவைகள் பாடி முடித்ததும், ஜோடிகளை மாற்றி விடுவார். இதன் மூலம் சிறார்களுக்கு தொடுகை(ஸ்பரிசம்) மூலம் ஏற்படுகின்ற 'புரிந்துணர்வு' சிறக்கிறது எனவும், இத் தொடுகையின் மூலம் ஏற்படுகின்ற நட்பின் பின்னர் ஒருவர் மீது ஒருவர் வன்முறையில் அல்லது காரணமில்லாத சேட்டைகளில்(குறும்பு என்பது மிதமான வார்த்தை என்பது எனது ஊகம்) ஈடுபடுவது தவிர்க்கப் படுகிறது எனவும் உளவியல் நூல்களில் வாசித்த போதும், ஐரோப்பாவில் சிறார் பள்ளிகளில் அதைக் கண்கூடாகக் கண்டபோதும் இந்த 'அறிவியல் உண்மையை' 33 வருடங்களுக்கு முன்பே அறிமுகம் செய்த எங்கள் 'கமலினி டீச்சர்' மிகப்பெரிய உளவியல் மேதையாக என் சிந்தையில் தெரிந்தார்.வாழ்க அவர்.
கமலினி டீச்சரின் நற் பண்புகளைப் பட்டியலிடும் இத் தொடரைத் தொடர்ந்து படித்து வரும் சகோதரி ஒருவர் இத் தொடர் பற்றிக் கருத்துரை எழுதும்போது எங்கள் கமலினி டீச்சர் ஒரு அதிர்ஷ்டசாலி(Lucky) எனக் குறிப்பிட்டு இருந்தார். அதாவது அவரின் புகழை இணையம் வாயிலாக உலகறிய செய்யும் என் போன்ற மாணவர்களைப் பெற்றதால் அவர் 'அதிர்ஷ்டசாலி' எனக் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் என்னைப் பொறுத்தவரை கமலினி டீச்சரிடம் பாலர் வகுப்பில் பயின்ற நாங்கள்தான் பெரும் பேறு பெற்ற 'அதிர்ஷ்டசாலிகள்'. ஏனெனில் ஒரு சமுதாயத்தின் பிஞ்சுகளை, எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும் 'ஆரம்பப் பணி' தன்னிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது என்பதை உணர்ந்து அதைச் செவ்வனே நிறைவேற்றிய ஒருவர். ஒரு பாலர் பள்ளி ஆசிரியை எவ்வாறு திகழ வேண்டும் என்பதற்கு 'கமலினி டீச்சர்' ஒரு நல்ல உதாரணம் என்றுதான் சொல்வேன். ஆனால் எங்கள் நாட்டின் பரிதாபமான நிலை உங்களுக்கு தெரியும்தானே? "சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும்" என்ற பழமொழியை நிரூபிப்பது போல நாங்கள் அவரிடம் கல்வி கற்ற 1977 ஆம் ஆண்டில் கமலினி டீச்சரின் மாதச் சம்பளம் 100 ரூபாய், நான் ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது (1982 இல்) அவரது சம்பளம் 200 ரூபாய். 1990 ஆம் ஆண்டில் அல்லைப்பிட்டியை விட்டு நான்/நாங்கள்  முதல் தடவையாக இடம்பெயர்ந்தபோது கமலினி டீச்சரின் சம்பளம் வெறும் 300 ரூபாய் மட்டுமே. ஆனால் 1990 ஆம் ஆண்டில் இலங்கையில்ஆசிரியப் பயிற்சி பெற்ற ஒரு ஆசிரியரின் அடிப்படைச் சம்பளம் 3000 ரூபாய். தற்போதைய நிலையில் இலங்கையில் ஒரு சாதாரண ஆசிரியரின் அடிப்படைச் சம்பளம் 24000 ரூபாய். ஆனால் பாவத்திற்கும், பரிதாபத்திற்கும் உரியவர்கள் இந்தப் பாலர் பள்ளி ஆசிரியைகள் மட்டும்தான். ஏனென்றால் தற்போதைய நிலையிலும் அவர்களது சம்பளம் வெறும் 3000 ரூபாய்தான். இலங்கையில் தற்போது உள்ள விலைவாசி உயர்வு நிலையில் கிடைக்கும் மூவாயிரம் ரூபாயில் என்ன பொருளை வாங்கி, எவ்வாறு வாழ்க்கை நடத்துவார்கள்?. இதை இலங்கை அரசும், இலங்கையின் கல்வி அமைச்சும் 'பாலர் பள்ளி' ஆசிரியைகளுக்குச் செய்த ஓர வஞ்சனையாகவே நான் பார்க்கிறேன்.
மறுபடியும் 'சின்னப் பாப்பா' பாட்டிற்கே வருகிறேன். முதல் நாள் ஒரு சிறுமியையும், சிறுவனையும் சேர்த்து ஒரு ஜோடி எனும் விகிதத்தில் பாட வைத்த 'கமலினி டீச்சர்' அடுத்த நாள் ஒவ்வொருவரையும் வீட்டிலிருந்து வரும்போது ஒரு 'பொம்மை'(பாவைப் பிள்ளை என இலங்கைத் தமிழில் கூறுவோம்) எடுத்து வருமாறு கூறினார்.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக